சனி, 9 மே, 2009

கோதை


அன்னநடை நடந்து -உலக
அழகைஎல்லாம் சுமந்து
சின்ன இடை வளைத்து -அவள்
என்ன சித்திரமாய் ஆடுகிறாள்

கண்ணில் ஒளி துலங்க -இரு
கைகளில் வளை குலுங்க
பொன்னில் செய்த மகள் -அன்பா
என்ன புதுமையாய் ஆடுகிறாள்

ஈரெட்டு எழில் படைத்து-நல்
இளமை கொள் உருவெடுத்து
கார் வெட்கும் குழல் முடித்து -அடடா
என்ன கவர்ச்சியாய் தோன்றுகிறாள்

கண்ணை சுழலவிட்டு -வந்த
காண்பவரை ஆட வைத்து
மண்ணை மறக்கும் வண்ணம் -தினம்
என்ன மாயமாய் ஆடுகிறாள்

எங்கு இவள் பெற்றாலோ -இதை
யாரிடம் தான் கற்றாலோ
தங்கு தடை எதுவுமின்றி -உரிய
தாளம் தவறாமல் ஆடுகிறாள்

ஆடுகிற ஆட்டம் கண்டு -உடன்
ஆர்த்து எழும் மக்கள் உள்ளம் -அந்த
கூடி நிற்கும் கூட்டமெல்லாம் -இந்த
கோதை பால் காதல் கொள்ளும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக